சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? மல்லிகார்ஜுன கார்கேயுடன் மாநில பொறுப்பாளர் சந்திப்பு
|சச்சின் பைலட் மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்து கார்கேயுடன் மாநில பொறுப்பாளர் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தார்.
இதன் மூலம் அசோக் கெலாட்-சச்சின் பைலட் மோதல் மீண்டும் வெடித்து உள்ளது. சொந்த கட்சி முதல்-மந்திரிக்கு எதிரான சச்சின் பைலட்டின் இந்த உண்ணாவிரதம் காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்தார். அப்போது சச்சின் பைலட் மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்து கார்கேயுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக பைலட்டின் உண்ணாவிரதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த ரந்தாவா, இது கட்சி விரோத நடவடிக்கை என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.