ஸ்ரீதேவியின் மகளுக்கும் தூதுவிட்ட சுகேஷ் சந்திரசேகர்...! நடிகைகளுக்கு ரூ.20 கோடி செலவு...! விசாரணையில் வெளியான அம்பலம்
|மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகர் நடிகைகளுக்கு ரூ.20 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது தெரியவந்திருக்கிறது. நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கும் அவர் தூது விட்டிருக்கிறார்.
புதுடெல்லி,
இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் உள்ளன. இவரது மோசடியெல்லாம் கோடிக்கணக்கிலேயே நடந்துள்ளன. இவர் நடமாடும் தொனியைப் பார்த்து பெரும் கோடீஸ்வரர்கள்கூட ஏமாந்திருக்கிறார்கள்.
இரட்டை இலை சின்ன வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும்போது தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அமலாக்க அதிகாரிகளும், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்க அதிகாரிகள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த குற்றப்பத்திரிகை பல வியப்பூட்டும் தகவல்களை புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. இதை அடிப்படையாக கொண்டு குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை போய்க்கொண்டு இருக்கிறது.
நடிகைகளுடன் பழக்கம்
சுகேஷ் சந்திரசேகர் இதற்கு முன்பு எத்தனை கோடிகளை மோசடி செய்திருந்தாலும், இந்த ரூ.200 கோடி மோசடி அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கி இருக்கிறது. அதற்கு நடிகைகளுடனான அவரது பழக்கமும் ஒரு காரணம்.
மோசடி பணத்தில் சுகேஷ் சுகபோகமாக வாழ்ந்துள்ளார். சிறையில் நடிகைகளை வரவழைத்து பொழுதுபோக்கும் அளவுக்கு சகல வசதிகளுடன் இருந்துள்ளார். இதற்கெல்லாம் அவருடைய உதவியாளர் பிங்கி இரானி உதவி செய்திருக்கிறார்.
பரிசு பொருட்கள்
பிங்கி இரானி மூலம் சுகேசுடன் அறிமுகம் ஆன நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 2 கார்கள், ஏராளமான விலையுயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை அவரிடம் இருந்து பெற்றிருக்கிறார். சுகேசை அவர் மிகவும் விரும்பியதாக தெரிகிறது. அவரை திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டிருக்கிறார்.
அதனால்தான் சுகேஷ் மோசடி நபர் என தெரிந்தும் கூடவே இருந்திருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். சுகேசும் ஜாக்குலினை மிகவும் நம்பி பழகியுள்ளார். ஜாக்குலினின் மேலாளருக்கு அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 'டுகாட்டி' மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்ததாகவும் அமலாக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இளம் நடிகைகள், மாடலிங் பெண்கள்
இளம் நடிகைகள் மற்றும் 'மாடலிங்' பெண்கள் மீது சுகேஷ் சந்திரசேகர் அதிக விருப்பம் கொண்டுள்ளார். அவர் விரும்பும் நடிகைகளை நயமாக பேசி, சுகேசிடம் வசமாக சிக்கவைப்பது பிங்கி இரானியின் வேலை என கூறப்படுகிறது. அதற்கான பணப்பலன்களை பிங்கி இரானி உடனுக்குடன் அனுபவித்து வந்துள்ளார்.
இப்படி சிக்கியவர்கள்தான் நடிகைகள் நோரா பதேகி, அருஷா பாட்டீல், சோபியா சிங் உள்ளிட்டோர். அவர்களில் பலர், வழக்கின் சாட்சிகளாக மாறிவிட்டனர்.
ஸ்ரீதேவி மகளுக்கு தூது
இந்த நிலையில் சுகேஷ், முக்கியமான சில நடிகைகளுக்கும் தூது விட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக பூமி பெட்னேகர், சாரா அலிகான் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கும் அழைப்பு விடுத்துப் பார்த்துள்ளார். ஆனால் அதுபோன்ற மிக பிரபலங்கள் சுகேசிடம் சிக்கவில்லை என கூறப்படுகிறது. ஒருசிலர் பரிசுப்பொருட்களை பெற்றதோடு நிறுத்திக்கொண்டதாகவும் தெரிகிறது.
இப்படி கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு சுகேஷ் சந்திரசேகர் நடிகைகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்தியுள்ளார். இந்த வகையில் அவர் ரூ.20 கோடிக்கும் மேல் பணம் செலவழித்து இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் பல சுவாரசியங்கள் வெளிப்படும் என தெரிகிறது.