< Back
தேசிய செய்திகள்
பெண் உள்பட 4 விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
தேசிய செய்திகள்

பெண் உள்பட 4 விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
15 Jun 2022 2:57 AM IST

பா.ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் நிலம் கேட்டு மிரட்டுவதாக கூறி பெண் உள்பட 4 விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஹாவேரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாவேரி

பா.ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் நிலம் கேட்டு மிரட்டுவதாக கூறி பெண் உள்பட 4 விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஹாவேரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 குவிண்டால் நிலம்

ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா சிடேனூர் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை 29 குடும்பத்தினர் ஆக்கிரமித்து விவசாயம் செய்தனர். இதனால் அந்த நிலத்திற்கு அவர்களுக்கு அரசு பட்டா வழங்கி இருந்தது.

இந்த நிலையில் ஹாவேரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. நேரு ஒலேகர் மற்றும் அவரது மகன்கள் அந்த 29 குடும்பத்தினரிடமும் அரசு கொடுத்த நிலத்தில் தலா 15 குவிண்டால் வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் விவசாயம் செய்ய விடமாட்டோம் என்றும் கூறி மிரட்டியதாக தெரிகிறது.

விஷம் குடித்தனர்

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட விவசாயிகளான தாண்டப்பா லமானி, குருசப்பா லமானி, கங்கவ்வா கப்பூர், அனுமந்தப்பா படிகெரே ஆகியோர் நேற்று தங்களது நிலத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதுபற்றி அறிந்ததும் பேடகி போலீசார் அங்கு சென்று 4 பேரையும் மீட்டு பேடகி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேடகி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நேரு ஒலேகர் எம்.எல்.ஏ.வும், அவரது மகன்களும் நிலத்தை கேட்டு மிரட்டியதால் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

பரபரப்பு

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை நேரு ஒலேகர் எம்.எல்.ஏ. மறுத்து உள்ளார். தானோ, குடும்பத்தை சேர்ந்தவர்களோ யாரிடமும் நிலத்தை கேட்கவில்லை என்றும், காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பேச்சை கேட்டு 4 பேரும் விஷம் குடித்து உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக 4 பேர் விஷம் குடித்த சம்பவம் ஹாவேரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்