வாங்கி கொடுத்த கடனை தோழிகள் கட்டாமல் ஏமாற்றியதால் விஷம் குடித்து பெண் தற்கொலை
|பங்காருபேட்டையில் மற்றொருவரிடம் வாங்கி கொடுத்த கடனை தோழிகள் கட்டாமல் ஏமாற்றியதால் வீடியோ பதிவிட்டு விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கோலார் தங்கவயல்:
பங்காருபேட்டையில் மற்றொருவரிடம் வாங்கி கொடுத்த கடனை தோழிகள் கட்டாமல் ஏமாற்றியதால் வீடியோ பதிவிட்டு விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கடன் வாங்கி கொடுத்தார்
கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை அடுத்த அத்திரிகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் பத்மா (வயது 35). இவரது தோழிகளான பாக்கியா, சப்ரிதா, பிரேமா ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்மாவிடம் பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து பத்மா, தேசிஹள்ளியை சேர்ந்த வரலட்சுமி என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி 3 பேருக்கும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் பணத்தை வாங்கிய அவர்கள் முறையாக அதை திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வட்டி அதிகமானது. மேலும் ரொக்கப்பணத்துடன் வட்டியை திருப்பி கொடுக்கும்படி வரலட்சுமி, பத்மாவிற்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பத்மா மிகவும் மன வேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று பத்மா, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செல்போன் மூலம் ஒரு வீடியோவை அனுப்பினார்.
விஷம் குடித்து தற்கொலை
அந்த வீடியோவில், நான் எனது தோழிகளான பாக்கியா, சப்ரிதா, பிரேமாவுக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன். அந்த பணத்தை அவர்கள் திரும்ப செலுத்தவில்லை. இதனால் அந்த பணத்தை நான் திரும்ப செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னால் அந்த பணத்தை கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர் எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் இந்த உலகில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை ெசய்து கொள்கிறேன். எனது சாவிற்கு தோழிகளான பாக்கியா, சப்ரிதா, பிரேமா ஆகிய 3 பேர் தான் காரணம் என்று கூறி விஷத்தை குடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், வீட்டிற்கு வந்து பத்மாவை மீட்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இது குறித்து பூதிகோட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்திய போலீசார், பத்மாவின் செல்போனை கைப்பற்றினர்.
மேலும் அந்த வீடியோவில் அவர் குற்றம்சாட்டிய பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பூதிகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.