கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை; 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
|அண்ணன்-தம்பி மனைவிகள் இடையே ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டார். மேலும் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கலபுரகியில் நடந்துள்ளது.
கலபுரகி:
அண்ணன்-தம்பி மனைவிகள் இடையே ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டார். மேலும் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கலபுரகியில் நடந்துள்ளது.
கர்ப்பிணி தற்கொலை
கலபுரகி மாவட்டம் கமலாபுரா தாலுகா தேவாலுநாயக் தாண்டாவை சேர்ந்தவர் மாருதி. இவரது சகோதரர் சந்தோஷ். இவர்கள் 2 பேரும் குவைத்தில் வேலை செய்து வருகின்றனர். தேவாலுநாயக் தாண்டா கிராமத்தில் சந்தோசின் மனைவி கல்பனா தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சந்தோசின் மனைவி ரேஷ்மா (26) என்பவரும் தேவாலுநாயக் தாண்டாவில் வசித்து வந்தார். ரேஷ்மா கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கல்பனாவுக்கும், ரேஷ்மாவும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் மனம் உடைந்த ரேஷ்மா நேற்று காலை கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்ததும் கமலாபுரா போலீசார் தீயணைப்பு படையினர் அங்கு வந்து ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கல்பனாவுடன் ஏற்பட்ட தகராறில் ரேஷ்மா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உயிருடன் மீட்பு
இதுபற்றி அறிந்ததும் கல்பனா தனது 2 குழந்தைகளுடன் ரேஷ்மா தற்கொலை செய்து கொண்ட கிணற்றுக்கு வந்தார். பின்னர் 2 குழந்தைகளையும் பிடித்து கிணற்றில் தள்ளிய கல்பனா தானும் கிணற்றில் குதித்தார். இதனை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சில வாலிபர்கள் கிணற்றில் குதித்து கல்பனாவையும், அவரது குழந்தைகளையும் உயிருடன் மீட்டனர்.
பின்னர் 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து கமலாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தேவாலுநாயக் தாண்டா கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.