< Back
தேசிய செய்திகள்
வேறு சாதி வாலிபருடன் இளம்பெண் ஓட்டம்: பெற்றோர், சகோதரர் விஷம் குடித்து தற்கொலை
தேசிய செய்திகள்

வேறு சாதி வாலிபருடன் இளம்பெண் ஓட்டம்: பெற்றோர், சகோதரர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
6 Oct 2022 3:10 AM IST

வேறு சாதியைச் சேர்ந்த வாலிபருடன் இளம்பெண் ஓடியதால் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

கோலார் தங்கவயல்:

வேறு சாதியைச் சேர்ந்த வாலிபருடன் இளம்பெண் ஓடியதால் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

வேறு சாதி இளைஞருடன் காதல்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்டிகனாளா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமப்பா(வயது 69), விவசாயி. இவரது மனைவி சரோஜா(55). இவர்களுக்கு அர்ச்சனா என்ற மகளும், மனோஜ்(25) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் அர்ச்சனாவும், அதே கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். டிரைவரான நாராயணசாமி வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் அர்ச்சனாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் காதல் ஜோடிகள் இருவரும் வெளியே சுற்றித்திரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அர்ச்சனாவிடம் அவரது பெற்றோர் காதலை கைவிட்டு விடும்படி கண்டித்துள்ளனர். இதனால் அர்ச்சனாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் அனைவரும் தூங்க சென்றனர். அப்போது அர்ச்சனா நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் காலை ராமப்பா, அர்ச்சனாவை தேடிபார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் ராமப்பாவின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ராமப்பாவின் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அதில் ராமப்பா, மனைவி சரோஜா மற்றும் மகன் மனோஜ் ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே சிட்லகட்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் போில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதையடுத்து அவர்கள் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு கடிதம் ஒன்று சிக்கியது. அதனை போலீசார் கைப்பற்றி பார்த்தனர்.

மகள் தான் காரணம்வேறு சாதி வாலிபருடன் இளம்பெண் ஓட்டம்:

பெற்றோர், சகோதரர் விஷம் குடித்து தற்கொலை

அதில் `எங்களது மகள் அர்ச்சனா வேறு சாதியை சேர்ந்த நாராயணசாமி என்பவரை காதலித்து வீட்டை விட்டு ஓடிவிட்டாள். இது எங்களுக்கு அவமானமாகி விட்டது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது தற்கொலைக்கு காரணம் அர்ச்சனா தான்' என்று எழுதப்பட்டு இருந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிட்லகட்டா போலீசார் அர்ச்சனா மற்றும் நாராயணசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிக்பள்ளாப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குஷால் கவுக்சி, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்