< Back
தேசிய செய்திகள்
கன்னட ராஜ்யோத்சவா விருது பெற்ற இயற்கை ஆர்வலர் தற்கொலை
தேசிய செய்திகள்

கன்னட ராஜ்யோத்சவா விருது பெற்ற இயற்கை ஆர்வலர் தற்கொலை

தினத்தந்தி
|
21 Sept 2022 12:15 AM IST

ஹரிஹரா தாலுகாவில், கன்னட ராஜ்யோத்சவா விருது பெற்ற இயற்கை ஆர்வலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு:

ஹரிஹரா தாலுகாவில், கன்னட ராஜ்யோத்சவா விருது பெற்ற இயற்கை ஆர்வலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இயற்கை ஆர்வலர்

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா மிட்லகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் வீரா ஆச்சார்(வயது 60). இவர் கடந்த 1978-ம் ஆண்டு தனது குடும்பத்துடன் மிட்லகட்டே கிராமத்திற்கு வந்தார். அங்கு ஆசாரி பட்டறை வைத்து வாழ்ந்து வந்தார். பின்னர் இயற்கை மீது ஆர்வம் கொண்ட அவர் ஏராளமான இடங்களில் மரங்களை வைத்து வளர்க்க முடிவு செய்தார்.

அதன்பேரில் அவர்கள் ஏராளமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு மரங்களை வளர்த்தார். இதுவரை அவர் பல்லாயிரக்கணக்கான மரங்களை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது சேவையை பாராட்டி கடந்த 1998-ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு இயற்கை பாதுகாவலர் என்று பாராட்டு விழா நடத்தியது.

தற்கொலை

மேலும் கடந்த 1999-ம் ஆண்டு அவருக்கு கர்நாடக அரசு சார்பில் கன்னட ராஜ்யோத்சவா விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மிட்லகட்டே கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனால் ரேஷன் கடை உரிமையாளரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. இதில் ரேஷன் கடை உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த வீரா ஆச்சார் நேற்று முன்தினம் தனது விவசாய தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று ஹரிஹரா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலெக்டர் நேரில் அஞ்சலி

பின்னர் அவரது உடல் அவருடைய வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் சிவானந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்யந்த், தாசில்தார் அஸ்வித் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் வீரா ஆச்சாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஹரிஹரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்