செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
|செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோலார் தங்கவயல்:
செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
செல்ேபான் கொடுக்காததால்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டேவை சேர்ந்தவர் ஷைமுலா. இவரது மகன் கோபி கிருஷ்ணா(வயது 17). இவர் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் கோபியை அவரது பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி வீட்டில் வைத்து கோபி செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்தார். அதை பார்த்து ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் அவரை கண்டித்து, செல்போனையும் வாங்கி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கோபி கிருஷ்ணா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் குடிபண்டே போலீசில் புகார் அளித்தனர். புகாரில் தங்களது மகன் மாயமாகி விட்டதாகவும், அவனை கண்டுபிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அழுகிய நிலையில் மீட்பு
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபி கிருஷ்ணாவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று குடிபண்டே அருகே உள்ள தோட்டம் ஒன்றில் மரத்தில் கோபி கிருஷ்ணா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த குடிபண்டே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் கோபி கிருஷ்ணாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோபி கிருஷ்ணா தூக்குப்போட்டு நீண்ட நாட்கள் ஆகியிருந்ததால் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய கோபி கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அந்த கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். கல்லூரி மாணவன் மாயமாகி 22 நாட்கள் கழித்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.