கேரளாவில் பண மோசடி வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன் எம்.பி.யிடம் 7 மணி நேரம் போலீசார் விசாரணை
|கேரளாவில் பணமோசடி வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன் எம்.பி.யிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பணமோசடி
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் வட்டி இல்லாமல் வங்கி கடன் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் வந்ததையடுத்து கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் அனூப் என்பவர் குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரில் மோன்சன் மாவுங்கல் தன்னிடம் 2018-ம் ஆண்டு மோசடி செய்து ரூ.25 லட்சம் பெற்றதாகவும், அதில் ரூ.10 லட்சத்தை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் எம்.பி. வாங்கி சென்றதாகவும் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கே.சுதாகரன் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சம்பந்தமாக கொச்சி களமசேரி குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து சுதாகரன் எம்.பி.யிடம் போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 7 மணி நேரம் நடந்தது.
ஜாமீனில் விடுவிப்பு
விசாரணை முடிந்த பிறகு குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். ஏற்கனவே கோர்ட்டு அறிவுறுத்தல் உள்ளதால் கைது செய்யப்பட்ட சுதாகரன் எம்.பி. இரவோடு இரவாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்கள் கருப்பு தினமாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும், கைது சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சுதாகரன் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, 'எனக்கு கோர்ட்டு மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த வழக்கை கோர்ட்டு மூலம் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்' என்றார்.