தொழில்நுட்ப கோளாறு காரணமாக கர்நாடகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் திடீர் பாதிப்பு
|கர்நாடகத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடர்பு கொள்ள முடியாததால் 108 ஆம்புலன்ஸ் சேவையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் பரிதவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சரியான நேரத்திற்கு சிகிச்சை கிடைக்காமல் துமகூருவில் மூதாட்டி பலியாகி உள்ளார்.
பெங்களூரு:
108 ஆம்புலன்ஸ் சேவை
கர்நாடகத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் பயன் அடைந்து வருகிறார்கள். கடந்த 2008-ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை மேற்கொள்ளும் பொறுப்பை ஜி.வி.கே. என்ற அமைப்புக்கு சுகாதாரத்துறை கொடுத்திருந்தது.
அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஜி.வி.கே. அமைப்பினர் ஆம்புலன்ஸ் சேவையை செய்து வருகிறார்கள். இதற்காக அந்த அமைப்பு வாடிக்கையாளர் சேவை மையங்களையும் அமைத்துள்ளது. 108 என்ற எண்ணுக்கு நோயாளிகள் தொடர்பு கொண்டால், வாடிக்கையாளர்கள் சேவை மையத்தினர், உடனடியாக இலவசமாக ஆம்புலன்சை அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை திடீரென்று பாதிக்கப்பட்டு உள்ளது.
சேவை பாதிப்பு
அதாவது பெங்களூரு, துமகூரு, கலபுரகி, ஹாவேரி, பெலகாவி, விஜயாப்புரா, யாதகிரி, ராய்ச்சூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றால், அழைப்புகள் செல்லவில்லை. அவ்வாறு அழைப்புகள் சென்றாலும், 108 ஆம்புலன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையங்களில் இருப்பவர்களால் பதிலளிக்கவோ, ஆம்புலன்சை அனுப்பி வைக்கவோ முடியாத நிலை உருவானது.
இதனால் தீவிர உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட நோயாளிகள், சரியான நேரத்திற்கு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற முடியாமல் பரிதவிக்க வேண்டிய நிலை உருவானது.
நோயாளிகள் பரிதவிப்பு
சேவை பாதிக்கப்பட்டதால் பெங்களூரு விக்டோரியா, பனசங்கரி, கே.ஜி.சென்ட்ரல் ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து, நேற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், மாவட்ட மற்றும் தாலுகா ஆஸ்பத்திரிகளில் 108 ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக தனியாருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை அழைத்து வருவதை பார்க்க முடிந்தது.
இதை பயன்படுத்தி தனியாா் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தார்கள். இதன் காரணமாக ஏழை நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானாா்கள். மேலும் நோயாளிகள் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைகளுக்கே நோயாளிகள் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார்கள்.
மூதாட்டி சாவு
இந்த நிலையில், துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா ஜடிஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயம்மா (வயது 65) என்பவர் தீவிர காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டார். 108 ஆம்புலன்சுக்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டும், தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதன் காரணமாக ஜெயம்மாவுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை. காய்ச்சலால் அவதிப்பட்ட ஜெயம்மா உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று துமகூரு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகரின் கவனத்திற்கு சென்றது. உடனே 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும்படி மந்திரி சுதாகருக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். இதையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு காண சுகாதாரத்துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுத்தார்கள்.
தொழில்நுட்ப கோளாறு
அப்போது 108 ஆம்புலன்ஸ் சேவையை செய்து வரும் ஜி.வி.கே. அமைப்பின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பொதுமக்களால் 108 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியாமலும், அதுபோல், அங்கு இருப்பவர்களால் தொலைபேசி அழைப்பை எடுத்து பேச முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது. வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள மதர் போர்டு பழுதடைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, மதர் போர்டுவை சரி செய்வது, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகளில் தொழில்நுட்ப குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் பிற பகுதிகளில் இருந்து தொழில்நுட்ப குழுவினர்களை அழைத்து கோளாறு சரி செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜி.வி.கே. அமைப்பின் பிரமுகர் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
108 பதிலாக 112 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்
கர்நாடகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் தற்காலிகமாக 108-க்கு பதில் 112 என்ற எண்ணுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கு பொதுமக்கள் அழைக்கும்படி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இலவச ஆம்புலன்ஸ் சேவை பெற விரும்பும் நோயாளிகள் 112 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.