பஞ்சாப் சட்டசபை கூட்டத்திற்கான உத்தரவு திடீர் ரத்து; இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?
|பஞ்சாப் சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திரும்ப பெற்றுள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் 10 எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். மேலும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது.
இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி பகவந்த் மான் வெளியிட்டார். சட்டசபை சிறப்பு அமர்வை கூட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, கவர்னர் மூலம் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடீரென திரும்ப பெற்றார். சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு குறிப்பிட்ட விதிகள் இல்லாததால் உத்தரவு திரும்ப பெறப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 'அமைச்சரவை கூட்டிய கூட்டத்தை கவர்னர் எப்படி நிராகரிக்க முடியும்? எனவே, இப்போது ஜனநாயகம் முடிந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் கூட்டத் தொடரை நடத்துவதற்கு கவர்னர் அனுமதி வழங்கினார். ஆப்ரேசன் தாமரை தோல்வியடைய தொடங்கி, ஆதரவு கிடைக்காததால், சட்டசபை கூட்டத்தொடருக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.