சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது - பிரதமர் மோடி
|சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த 14-ந் தேதி விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலத்துக்காக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகின்றன.
அந்தவகையில் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டம் இந்தியாவுக்கும், மனித குலத்துக்கும் சிறப்பாக பயனளிக்கட்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்காக பிரதமர் மோடி அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதில் டுவிட்டில், 'உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உண்மையில், சந்திரயான் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நல்வழி காட்டுவதாக உள்ளது' என குறிப்பிட்டு இருந்தார்.