'கேட்' தேர்வு வெற்றியை வேலைவாய்ப்புக்கு தகுதியாக எடுக்கக்கூடாது - டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
|‘கேட்’ தேர்வு வெற்றியை வேலைவாய்ப்புக்கு தகுதியாக எடுக்கக்கூடாது என்று மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு குறித்து மக்களவையில் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்து பேசினார். அந்த நிறுவனத்தில் 299 பொறியாளர் பணியிடங்கள் 'கேட்' தேர்வு வெற்றியின் அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதாகவும், இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடப்பதாகவும் கூறிய அவர், இதில் தமிழர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
"கேட் தேர்வு வெற்றியை மேற்படிப்புக்கான தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, வேலைவாய்ப்புக்கு தகுதியாக எடுத்துக்கொள்ளக்கூடாது, வேலைவாய்ப்பு என்பது சமூக நீதியின்படி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் பேசிய அவர், "முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் இதை நான் வலியுறுத்தினேன். பின்னர் சம்பந்தப்பட்ட மந்திரி பிரகலாத் ஜோஷியை சந்தித்தும் பேசினேன். அவர் நிலக்கரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரை அழைத்து பேசுவதாக சொல்லியிருக்கிறார். 4-ந் தேதி (நாளை) இதுதொடர்பாக நாங்கள் 3 பேரும் ஆலோசிக்க இருக்கிறோம்" என்றார்.
மேலும், "நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மத்திய மந்திரி எல்.முருகன், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பற்றி பேசியது தவறு. இதைப்போல ஜி.எஸ்.டி. குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதும் சரியல்ல" என்று டி.ஆர்.பாலு கூறினார்.