காவிரி-கோதாவரி இணைப்புக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு - மத்திய அரசு தகவல்
|காவிரி-கோதாவரி இணைப்புக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையை மாநிலங்களவையில் மத்திய அரசு சமர்ப்பித்தது.
புதுடெல்லி,
நதிகள் இணைப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி பிஸ்வேஷ்வர் துடு நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் காவிரி-கோதாவரி இணைப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபற்றி மத்திய அரசு தெரிவித்து இருப்பதாவது:-
3 இணைப்பு திட்டங்களை உள்ளடக்கிய காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை, தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் முடிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கான மாற்று ஆய்வு முடிக்கப்பட்டு, அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஜனவரி மாதம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.