துப்பாக்கி முனையில் பெண் போலீசை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்
|துப்பாக்கி முனையில் மிரட்டி பெண் போலீசை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டம் காலேஸ்வரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் பாவனீசன் கவுட். இதே போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் வேலை செய்து வருகிறார்.அந்த பெண் போலீசை அடைய சப்-இன்ஸ்பெக்டர் பல நாட்களாக முயற்சி செய்து வந்துள்ளார்.
இதற்காக கடந்த ஒரு மாதமாக பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு மணிக்கு ஜன்னல் வழியாக குதித்து பெண் போலீஸ் வீட்டுக்குள் சப்-இன்ஸ்பெக்டர் நைசாக புகுந்தார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண் போலீசை எழுப்பி, பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.
அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், எதிர்ப்பு தெரிவித்து அலறினார். உடனே கையில் இருந்த துப்பாக்கியை காட்டி, ஆசைக்கு இணங்காவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டி அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் அதிகாரத்தை பயன்படுத்தி தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டி விட்டு சென்று விட்டார். இருந்தபோதிலும் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் தைரியமாக போலீசில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை புகாராக கொடுத்தார். போலீசாரின் தீவிர விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் பெண் போலீசை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து மாநில போலீஸ் டி.ஜி.பி. அதிரடியாக உத்தரவிட்டார். கைதான சப்-இன்ஸ்பெக்டர் இதற்குமுன்பு இதேபோல 3 பெண் போலீசாரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அதிர்ச்சி தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.