காஷ்மீர் மருத்துவக்கல்லூரி: 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட விவகாரத்தில் மாணவர்கள் மோதல் - 10 பேர் இடைநீக்கம்
|காஷ்மீர் மருத்துவக்கல்லூரியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட விவகாரத்தில் மாணவர்கள் மோதிய சம்பவம் தொடர்பாக 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஜம்மு,
நாடு முழுவதும் சமீபத்தில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் 'லிங்க்' ஒன்றை காஷ்மீரின் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்.
இதற்கு சக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
அப்போது வெளிநபர்கள் சிலரும் உள்ளே புகுந்து மாணவர்களை பலமாக தாக்கினர். இதில் 5 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக கல்லூரிக்கு விரைந்தனர்.
போலீசாரை கண்டதும், தாக்குதலில் ஈடுபட்ட வெளிநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலை கண்டித்தும், மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் நேற்று மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மாணவர்கள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோசமாக தாக்கப்பட்ட 23 வயது மாணவர் உள்பட 10 பேரை நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 மாணவர்களும், கல்லூரி விடுதியிலிருந்தும் 2 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.