பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்
|2 ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
சிவமொக்கா:-
போக்சோவில் வழக்கு
சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா ரிப்பன்பேட்டை அருகே உமச்சா பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் 2 ஆசிரியர்கள், அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர்கள் மீது ரிப்பன்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், அந்த 2 ஆசிரியர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அந்த ஆசிரியர்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் எந்த மாணவிகளிடமும் தவறாக நடந்து கொாள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
பள்ளி முன்பு போராட்டம்
இந்த நிலையில் ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் பள்ளி முன்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மிகவும் நல்ல நடத்தையை உடையவர்கள். மாணவ-மாணவிகளிடம் அன்பாக பழகுபவர்கள். ஏதோ காரணத்துக்காக அவர்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சதி உள்ளது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மீது பதிவான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்கள், வட்டார கல்வித்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.