மாணவி மர்ம மரணம்: சி.பி.சி.ஐ.டி. நியாயமாக விசாரிக்கவில்லை - சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீமதியின் தாயார் தரப்பு வாதம்
|கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. நியாயமாக விசாரிக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீமதியின் தாயார் தரப்பினர் வாதிட்டனர்.
புதுடெல்லி,
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமரணம் தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஸ்ரீமதியின் தாயார் செல்வி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் செல்வி சார்பில் மூத்த வக்கீல் வெங்கடரமணி ஆஜராகி, 'இந்த விவகாரம் தொடர்பாக கூடுதலாக சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே அதற்கு அவகாசம் அளியுங்கள், விசாரணையை தசரா விடுமுறைக்கு பின்னர் பட்டியலிடுங்கள், இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நியாயமாக நடைபெறவில்லை' என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்ற சுப்ரீம்கோர்ட்டு, இந்த மேல்முறையீட்டு மனுவை தசரா விடுமுறைக்கு பின்னர் பட்டியலிட உத்தரவிட்டது.