கேரளாவில் கல்லூரி மாணவிகள் முடிகளை வெட்டி நூதன போராட்டம்
|. மாணவிகள் முடியை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் பதிவாகி வைரலானது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவரும் அவரது வகுப்பு தோழியும் கோட்டயம் சந்திப்பு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மாணவர்கள் மாணவிகளை ஈவ்டீசிங் செய்தனர்.
இதற்கு மாணவரும், அவரது தோழியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த கும்பல் மாணவரையும், தோழியையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்திற்கு கல்லூரி மாணவ-மாணவிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற மாணவிகள் தங்கள் முடிகளை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர். மாணவிகள் முடியை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் பதிவாகி வைரலானது.
இதற்கிடையே மாணவிகளிடம், வாலிபர்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட தகவல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.