பொக்லைன் உதவியுடன் ஆற்றை கடக்கும் மாணவர்கள்
|ஹாசனில் பொக்லைன் உதவியுடன் மாணவர்கள் ஆற்றை கடந்து வருகிறார்கள்.
ஹாசன்:
ஹாசன் மாவட்டத்தில் பெய்து தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் குளம், ஏரிகளும் நிரம்பி வழிகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா வெங்கடஹள்ளி ஜம்பரடி கிராமத்தில் செட்டினஹல்லா ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது.
இதனால் அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளம் பாலத்தை மூழ்கடித்தபடி பாய்ந்தோடி வரும் நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து பொக்லைன் வாகனத்தின் முன்பக்க தொட்டியில் நின்றபடி 4 மாணவர்களாக மறுகரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.