மாவட்ட செய்திகள்
பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
|பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
தமிழக மாணவர்கள் கைது
பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி முனபாக மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், கிரிநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்துள்ளனர்.விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு கோவையை சேர்ந்த சுகேஷ்குமாரன் (வயது 20), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனோரஞ்சன் (20) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்ததும் தொியவந்து உள்ளது.
போதைப்பொருட்கள் பறிமுதல்
பெங்களூரு பொம்மனஹள்ளி 9-வது தெருவில் உள்ள குடியிருப்பில் சுகேஷ்குமாரனும், பீலேஹள்ளி அருகே அனுகிரகாலே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனோரஞ்சனும் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு சுகேஷ்குமாரனும், மனோரஞ்சனும் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள கல்லூரிகள் முன்பாக நின்று கொண்டு தங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு போதைப்பொருட்களை 2 பேரும் விற்றுள்ளனர்.
அதுபோல், பனசங்கரி, 3-வது ஸ்டேஜ், 100 அடி ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே காரில் இருந்தபடி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்றபோது 2 பேரையும் கிரிநகர் போலீசார் கைது செய்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து 52 கிராம் போதை மாத்திரைகள், போதைப்பொருட்கள், 2 ஐபோன்கள், ஒரு சொகுசு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.