நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
|கோட்டா நகரில் தங்கி நீட் தேர்வுக்காக படித்து வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில் சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியானாவைச் சேர்ந்த சுமித் பஞ்சால்(20) என்ற மாணவர், தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், இன்று கோட்டா நகரில் தங்கி படித்து வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாரத் குமார் ராஜ்புட்(20) என்ற மாணவர், கோட்டாவில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியில் தங்கி, கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.
இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ள பாரத் குமார், 3-வது முறையாக வரும் மே 5-ந்தேதி நீட் தேர்வு எழுத இருந்தார். பாரத் குமாருடன் அவரது உறவினர் ரோகித் என்பவரும் தங்கியிருந்து நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் ரோகித் வெளியே சென்றிருந்த சமயத்தில், அறையில் தனியாக இருந்த பாரத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சுமார் 11.15 மணியளவில் ரோகித் தனது அறைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பாரத் குமார் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து வந்து பாரத் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பாரத் குமார் தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், "மன்னித்துவிடுங்கள் அப்பா, என்னால் இந்த முறையும் வெற்றி பெற முடியாது" என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டில் இதுவரை கோட்டா நகரில் பயிற்சி பெற்று வந்த 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டில் கோட்டா நகரில் பயின்று வந்த 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களுக்கு ராஜஸ்தான் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.