சிறுவனின் சீருடையில் தீவைத்த அங்கன்வாடி ஆசிரியர்கள்
|அடிக்கடி சிறுநீர் கழித்ததால் சிறுவனின் சீருடையில் அங்கன்வாடி ஆசிரியர்கள் தீவைத்த சம்பவம் துமகூருவில் நடந்துள்ளது.
துமகூரு:
துமகூரு மாவட்டம் சிக்கனாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட கோடேகெரே கிராமத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படித்து வருகின்றனர். அங்கன்வாடியில் படிக்கும் சித்தார்த் என்ற சிறுவன் அடிக்கடி தனது உடையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிறுவனை விளையாட்டாக மிரட்டி வருவது வழக்கம். இந்த நிலையில் சிறுவன் தனது ஆடையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் விளையாட்டாக மிரட்டுவதாக கூறி சிறுவனின் சீருடையான கால் சட்டையின் அருகே தீயை வைப்பது போல் நடித்துள்ளனர். ஆனால் கால்சட்டையில் தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் சிறுவனின் மர்ம உறுப்பில் தீக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர். சம்பவம் தொடர்பாக சிக்கனஹள்ளி போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.