< Back
தேசிய செய்திகள்
சமூக ஊடகத்தில் வலுத்த எதிர்ப்பு; சூப்பர்சோனிக் விமான வால் பகுதியில் கடவுள் அனுமனின் உருவ படம் நீக்கம்
தேசிய செய்திகள்

சமூக ஊடகத்தில் வலுத்த எதிர்ப்பு; சூப்பர்சோனிக் விமான வால் பகுதியில் கடவுள் அனுமனின் உருவ படம் நீக்கம்

தினத்தந்தி
|
14 Feb 2023 3:53 PM IST

ஏரோ இந்தியா 2023-ல் பங்கேற்ற சூப்பர்சோனிக் விமானத்தின் வால் பகுதியில் இடம் பெற்ற கடவுள் அனுமனின் உருவ படம் சமூக ஊடகத்தில் வலுத்த எதிர்ப்பால் நீக்கப்பட்டது.



புதுடெல்லி,


கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஏரோ இந்தியா 2023 என்ற பெயரில் விமான கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. ஆசிய அளவில் மிக பெரிய 14-வது விமான கண்காட்சியான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில், 100 நாடுகள் வரை கலந்து கொண்டன. இந்தியா மீது உலகின் நம்பிக்கையை இது எடுத்து காட்டுகிறது என்றும் இந்தியாவின் திறன் விரிவடைவதற்கான ஓர் எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) சார்பில் எச்.எல்.எப்.டி.-42 என்ற சூப்பர்சோனிக் விமானம் ஒன்றும் இடம் பெற்றிருந்தது.

அதன் வால் பகுதியில் கடவுள் அனுமனின் உருவ படம் ஒன்றும் காணப்பட்டது. அதன் அருகில் புயல் வந்து கொண்டிருக்கிறது என்ற வாசகமும் எழுதப்பட்டு இருந்தது.

இந்த புகைப்படங்களை மத்திய சுரங்கம், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தனது டுவிட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

எனினும், போர் விமானம் ஒன்றில் இந்து கடவுளின் படம் இடம் பெற்றிருப்பதற்கு சமூக ஊடகத்தில் கடுமையான விவாதம் நடந்தது. ஆயுத படைகள் எந்தவொரு மதம் சார்ந்த பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்க கூடாது. அது வீரர்களின் மனநிலையை பாதிக்கும் என்ற வகையிலான விமர்சனங்கள் எழுந்தன.

இவற்றை கவனத்தில் கொண்ட இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உடனடியாக அந்த புகைப்படங்களை நீக்கி சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேலும் செய்திகள்