இந்தியா-ஜப்பானின் வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை: பிரதமர் மோடி
|ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடனான பிரதமர் மோடியின் சந்திப்பில் உட்கட்டமைப்பு வசதிகள், குறைகடத்திகள், பாதுகாப்பு, பசுமை எரிசக்தி மற்றும் பிற விசயங்களில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
வில்மிங்டன்,
அமெரிக்காவில் 4 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு நேற்று சென்றடைந்த பிரதமர் மோடி, அதன் ஒரு பகுதியாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார்.
இதில், இரு நாடுகளின் உறவை இரு நாட்டு தலைவர்களும் மறுஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளை விரிவாக்கம் செய்வதற்கான வழிகளை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின்பு, இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் இன்று வெளியிட்ட பதிவில், பிரதமர் கிஷிடாவுடன் நல்ல முறையில் சந்திப்பு நடந்தது. உட்கட்டமைப்பு வசதிகள், குறைகடத்திகள், பாதுகாப்பு, பசுமை எரிசக்தி மற்றும் பிற விசயங்களில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி ஆலோசனை மேற்கொண்டோம்.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவையாக உள்ளன என பதிவிட்டு உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா-ஜப்பான் நாடுகளின் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய நட்புறவை மேம்படுத்துவதற்கு ஈடுஇணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை வழங்கி வருவதற்காக கிஷிடாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார்.