ஆடைகள் களைந்த நிலையில், 9 பெண்கள்... சீரியல் கில்லரின் திகில் வேலை
|உத்தர பிரதேசத்தில் 9 பெண்கள் மரணத்தில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உருவங்களை படங்களாக வரைந்து போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
பரேலி,
உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டில் 8 பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சாஹி, ஷீஷ்கார் மற்றும் ஷேர்கார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கரும்பு தோட்டத்திற்குள் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளனர்.
இந்த படுகொலைகளை செய்த சீரியல் கில்லர் யார் என்பது போலீசாரால் கண்டறியப்படாமல் இருந்தது. இவற்றில் கடந்த ஆண்டு ஜூனில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்தன. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஆனால், விசாரணையில் முன்னேற்றம் இல்லை. இதன்பின் ஒரு மாதத்திற்கு பின்னர், ஜூலையில் ஒருவரும், ஆகஸ்டு மற்றும் அக்டோபரில் தலா ஒருவரும் மற்றும் நவம்பரில் 2 பெண்களும் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் கரும்பு தோட்டத்தில், ஆடைகள் களைந்த நிலையில் மரணம் அடைந்து அலங்கோல நிலையில் கிடந்தனர். 8 பெண்களும் 40 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவர்களை மூச்சு திணற, கழுத்து நெரித்து படுகொலை செய்தது தெரிய வந்தது. இதில், அவர்கள் கட்டியிருந்த சேலையை கொண்டே கொலை நடந்திருக்கிறது. ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
8-வது பெண் கொல்லப்பட்டதும் 300 போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் 14 தனிப்படைகளாக சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் ரோந்து சென்றும், குற்றவாளிகள் என தெரிந்தவர்களையும் தொடர்ந்து கண்காணித்தனர். எதிலும் பலனில்லை.
இதில் ஈடுபட்டது ஒரு நபரா? அல்லது கும்பலா? என்பதும் தெரிய வரவில்லை. இதன்பின் வேறு கொலைகள் எதுவும் கடந்த ஆண்டில் நடைபெறவில்லை. யாரும் கைதும் செய்யப்படவில்லை. 7 மாதங்கள் வரை அமைதியாக சென்றது. இந்த சூழலில், நடப்பு ஜூலையில் 45 வயது கொண்ட அனிதா என்ற பெண்ணின் உடல் கரும்பு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.
ஷேர்கார் நகரில் உள்ள புஜியா ஜாகிர் கிராம பகுதியை சேர்ந்தவரான அனிதா, பதேகஞ்ச் கிர்கா கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
போகும்போது, பணம் எடுக்க வங்கிக்கும் சென்றிருக்கிறார். அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ததில், சேலையை கொண்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால், கடந்த கால படுகொலைகளுக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
காவல் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் ரமித் சர்மா, ஐ.ஜி. ராகேஷ் குமார், மூத்த எஸ்.பி. அனுராக் ஆரியா மற்றும் எஸ்.பி. மனுஷ் பரீக் உள்ளிட்டோரும் சம்பவ பகுதிக்கு சென்று நிலைமையை ஆராய்ந்தனர். குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உருவங்களை படங்களாக வரைந்து வெளியிட்டு உள்ளனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.