வாக்காளர்கள் தகவல்கள் திருடிய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
|வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
நியாயமான விசாரணை
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, பெங்களூரு விதானசவுதாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று காலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வகையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை...
வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் சிலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் கூட வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம், வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது குறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டு உள்ளது. இதனை அரசும் வரவேற்கிறது. நியாயமான விசாரணை நடத்தப்படுவதுடன், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், ஒருவர் 2 அல்லது 3 இடங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் வைத்திருந்ததால் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முதற்கட்டமாக எடுத்திருக்கும் நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கதாகும். நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரின் போது பெலகாவி சுவர்ண சவுதாவில் கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா சிலைகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்.
இவ்வாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.