முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை: கேரளா மந்திரி எச்சரிக்கை
|முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா மந்திரி எச்சரித்துள்ளார்.
இடுக்கி,
இடுக்கியில் கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் முல்லை பெரியாறு அணை குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் பலர் ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்யான தகவலை பரப்பும் யூடியூபர்கள் உள்ளிட்டோர் மீது மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது. இங்கு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மாநில அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. ஊராட்சி அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு முல்லை பெரியாறு அணை பகுதி கண்காணிக்கப்படும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மக்களுடன் மாநில அரசு இணைந்து நின்று செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.