கால்நடைகள் தண்டவாளம் அருகே மேய்ந்தால் கடும் நடவடிக்கை; ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
|ரெயில்வே தண்டவாள பகுதிகள் அருகே கால்நடைகள் மேய்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கத்திய ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை குஜராத் அதுல் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த ரெயில் மீது மாடு மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், ரெயிலின் முன்பகுதியில் சிறிதளவு சேதமடைந்தது. இதனையடுத்து ரெயில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் மூலம் இந்த மாதத்தில் 3-வது முறையாக வந்தே பாரத் ரெயில் விபத்தில் சிக்கி உள்ளது.
இதற்கு முன், கடந்த 6-ந்தேதி வத்வா ரெயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது காட்டெருமை கூட்டம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரெயிலின் முன்பகுதி சேதமடைந்தது.
இதேபோல், அதற்கு அடுத்த நாளான கடந்த 7-ந்தேதி மீண்டும் கால்நடை மீது மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் கால்நடை மீது ரெயில் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த நிலையில், மேற்கத்திய ரெயில்வே சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, ரெயில்வே நிலம் அல்லது தண்டவாள பகுதிகளின் அருகே தங்களது கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது அவற்றை மேய்ப்பவர்கள் விடவேண்டாம் என வேண்டுகோள் விடப்படுகிறது.
அதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என்று மேற்கத்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.