கர்நாடகத்தில் ரேபிஸ் நோயால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
|கர்நாடகத்தில் ரேபிஸ் நோய் அதிகரித்து வருவதால் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த மாதம்(செப்டம்பர்) 28-ந் தேதி உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தையொட்டி தேசிய ரேபிஸ் நோய் தடுப்பு பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
ரேபிஸ் நோய்
அதில் கர்நாடகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை ரேபிஸ் நோயால் 25 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கர்நாடக சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடகத்தில் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், 99 சதவீதம் பேர் வெறிநாய் கடிகளால் ரேபிஸ் நோய் வந்து இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஒரு சதவீதம் பேர் பூனைகள், நரிகள், ஓநாய்கள் மற்றும் வனவிலங்குகள் கடித்து இறந்துள்ளதாக தகவல்கள் பதிவாகி இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
தடுப்பூசி
இதுதவிர கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 3.18 லட்சம் பேர் விலங்குகள் கடியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இருப்பதாகவும், அதில் 3.05 லட்சம் பேர் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 2.4 லட்சம் பேர் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், மற்றவர்கள் ரேபிஸ் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரேபிஸ் என்பது ஒருவித வைரஸ் ஆகும். அது பொதுவாக நாய்கள், வவ்வால்கள் போன்றவற்றை எளிதில் தாக்கி அவற்றின் மூளையை செயலிழக்க செய்துவிடும். இதனால் அவைகள் மனிதனை கடிப்பதால் அந்த வைரஸ் மனிதனின் உடலில் எளிதில் பரவி உயிரிழக்க வைத்துவிடும். வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போடுவதால் அவற்றை எளிதில் இந்த வைரஸ் தாக்காது.
மக்கள் குமுறுகிறார்கள்
ஆனால் தெருநாய்களை அவைகள் எளிதில் தாக்கிவிடும். ரேபிஸ் வைரசால் தாக்கப்பட்ட தெருநாய் சில நாட்களில் உயிரிழந்துவிடும். ஆனால் அது இறப்பதற்குள் வாயில் உமிழ்நீர் வடிந்து அங்கும், இங்குமாக வெறிபிடித்து சுற்றித்திரியும். கண்ணில் காண்போரை கடித்து குதறும். இவ்வாறாக ரேபிஸ் நோய் பரவுகிறது. அதனால் தான் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் குமுறி வருகிறார்கள்.
அதற்கு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தற்போது தேசிய ரேபிஸ் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தால் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி டாக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
நாய்களை தொந்தரவு செய்யக்கூடாது
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத் கூறுகையில், 'நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோருக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கிடைக்கிறது. இந்த தடுப்பூசி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படுகிறது. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெங்களூருவில் இதுவரை 63 ஆயிரத்து 324 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
32 ஆயிரத்து 626 நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளன. பொதுமக்கள் நாய்களை தொந்தரவு செய்யக்கூடாது. குப்பை கழிவுகளை சாலையோரம் வீசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் நாய்கள் குட்டி போட்டு இருந்தால் அதன் அருகில் செல்லக்கூடாது. அவ்வாறு செய்தால் நம்மை நாய்கள் ஒன்றும் செய்யாது' என்றார்.
மந்திரி தினேஷ் குண்டுராவ்
பெங்களூரு சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் கூறும்போது, 'பெங்களூருவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் தெருக்களில் நடந்து செல்லும்போது அந்த நாய்கள் வந்து தாக்கி கடிக்கின்றன. ரேபிஸ் நோய் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். நாய் கடியால் பாதிக்கப்பட்டோருக்கு தாமதமின்றி தடுப்பூசி கிடைக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு சிகிச்சை அளிக்கிறார்கள்.
ஆனால் அந்த நாய்களை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது. மாநகராட்சியே அதை ஒரு இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாய் கடி சம்பவங்கள் குறையும். தெருநாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் எடுக்க வேண்டும்' என்றார்.
50 நாட்கள் தனிமையில்...
இதுபற்றி சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் பகுதியைச் சேர்ந்த கால்நடை டாக்டர் சூரியன் கூறுகையில், 'ரேபிஸ் நோய் தெருநாய்களுக்கு பரவி இருந்தால் உடனடியாக அவற்றை பிடித்து தடுப்பூசி போட்டு கட்டுக்குள் கொண்டு வரலாம். வெளிநாடுகளில் இருந்து தான் ரேபிஸ் நோய் பரவுகிறது. அதனால் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நாய்களை 50 நாட்கள் தனிமையில் வைத்து கண்காணித்து அவற்றுக்கு ரேபிஸ் வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிந்து அதன்பின்னர் வீடுகளுக்கு கொண்டு சென்று வளர்க்கலாம்.
ஒருவரை ஒரு தெருநாய் கடித்தால் அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு அறிகுறி தெரியவே 15 நாட்கள் ஆகிவிடும். ஆனால் அதற்குள் அவரது உடல் முழுவதும் அந்த வைரஸ் பரவி இருக்கும். தெருநாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அதாவது கருத்தடை தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசியை உடனே போட வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்' என்று கூறினார்.
கழுவ வேண்டும்
இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற டாக்டர் ரகுராம் பட் கூறுகையில், 'வளர்ப்பு நாய்கள் கடித்தால் ரேபிஸ் நோய் வராது. வெறிநாய்கள் கடித்தால் தான் ரேபிஸ் நோய் பரவும். ஒருவேளை ஒருவரை வெறிநாய் கடித்தால் உடனே சுத்தமான தண்ணீரில் அந்த இடத்தை சுமார் 15 நிமிடங்கள் நன்றாக கழுவ வேண்டும்.
பின்னர் உரிய சிகிச்சை பெற வேண்டும். அப்படியானால் ரேபிஸ் வைரஸ் பரவும் வேகம் குறையும். தெருநாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். ஆனால் அந்த தடுப்பூசியின் தாக்கம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே இருக்கும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்' என்றார்.
துரித நடவடிக்கை
இதுபற்றி சிவமொக்கா(மாவட்டம்) டவுனில் அச்சகம் நடத்தி வரும் சீனிவாஸ் கூறுகையில், 'நான் எனது வீட்டில் செல்லமாக நாய் வளர்த்து வருகிறேன். நாம் வீட்டில் வளர்க்கும் நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம்.
நாய்க்கு வெறி பிடித்து இருந்தாலோ, உமிழ்நீர் வடிந்து கொண்டே இருந்தாலோ உடனடியாக அவற்றை வீட்டில் இருந்து வெளியேற்றுவது நல்லது. வெறிநாய்கள் கடித்தால் கண்டிப்பாக ரேபிஸ் நோய் வந்துவிடும். தற்போதுள்ள நவீன மருத்துவ முறையில் வெறிநாய் கடிக்கு விரைவில் சிகிச்சை கிடைக்கிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த அரசும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.