தெருநாய்களை பிடிக்க போராடிய மாநகராட்சி தொழிலாளர்கள்
|பிரதமர் வருகையால் விதானசவுதாவை சுற்றி தெருநாய்களை பிடிக்க மாநகராட்சி தொழிலாளர்கள் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பெங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சிலை, 2-வது விமான நிலைய முனையத்தையும் அவர் திறந்துவைத்ததுடன், வந்தே பாரத் ரெயிலையும் தொடங்கி வைத்திருந்தார். அத்துடன் விதானசவுதா எம்.எல்.ஏ.க்கள் பவனில் கனகதாசர் சிலைக்கும், வால்மீகி சிலைக்கும் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தி இருந்தார். முன்னதாக விதானசவுதா, எம்.எல்.ஏ.க்கள் பவனுக்கு பிரதமர் வருகை தர இருந்ததால், அங்கு சுற்றித்திரியும் நாய்களால் தொந்தரவு ஏற்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கருதினர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் காலையில் பிரதமர் வருவதற்கு முன்பாக, விதானசவுதா, எம்.எல்.ஏ.க்கள் பவனில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும்படி மாநகராட்சி தொழிலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக தெரு நாய்களை பிடிக்க தொழிலாளர்கள், வேன் மற்றும் வலைகளுடன் சுற்றினர். ஆனால் அவர்களிடம் பிடிபடாமல் தெருநாய்கள் தப்பி ஓடின. அந்த தெருநாய்களை பிடிக்க தொழிலாளர்கள் போராடினார்கள். ஆனாலும் தெரு நாய்கள் சிக்காமல் தப்பி ஓடி விட்டது. இதன் காரணமாக தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.