< Back
தேசிய செய்திகள்
விவசாயிகள்-ஆதிதிராவிடர்களுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்தியது இரட்டை துரோகம்; பா.ஜனதா அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

விவசாயிகள்-ஆதிதிராவிடர்களுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்தியது இரட்டை துரோகம்; பா.ஜனதா அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
5 Sept 2022 10:16 PM IST

விவசாயிகள்-ஆதிதிராவிடர்களுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்தியது இரட்டை துரோகம் என்று பா.ஜனதா அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மின்சாரத்துறையை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் அமலாவதற்கு முன்பே கர்நாடக அரசு விவசாய பம்பு செட்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை நிறுத்தியுள்ளது. அதே போல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 75 யூனிட் இலவச மின்சாரத்தையும் நிறுத்தியுள்ளது. இதற்காக கடந்த 3-ந் தேதி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு இந்த இரட்டை என்ஜின் அரசு இரட்டை துரோகம் செய்துள்ளது. நாட்டின் சொத்துகளை தனியாருக்கு விற்பதே இந்த இரட்டை அரசின் சாதனையாக உள்ளது. பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்து சென்ற பிறகு இந்த 2 திட்டத்தையும் அரசு நிறுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சு போலியானது என்பது அரசின் உத்தரவு மூலம் உறுதியாகியுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் இலவசம் என்று கருதக்கூடாது. அரசே விவசாயிகளின் கடனாளி என்று நஞ்சுண்டசாமி அடிக்கடி சொல்வார். இதை நானும் முழுமையாக ஆதரிக்கிறேன். அதனால் கர்நாடக பா.ஜனதா அரசு தனது 2 உத்தரவுகளையும் ரத்து செய்து, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளின் கோபம் இந்த அரசை விடாது.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்