கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
|அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
மைசூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (ேக.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பி இருந்தது. இதில் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 10-ந்தேதியில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டு்ம் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இதையடுத்து கடந்த 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 6 நாட்கள் காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
கா்நாடக அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கும் நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து மண்டியா, ைமசூரு, சாம்ராஜ்நகரில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள், விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழகத்துக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இதன்காரணமாக இரு அணைகளில் இருந்தும் காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்த நிலையில் நேற்று முதல் கே.ஆர்.எஸ். அணையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 102.70 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3,276 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 5,736 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,275.24 அடி தண்ணீா் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,411 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாயில் 2,325 கனஅடி தண்ணீரும், ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. கபிலா ஆறு வறண்டுவிட கூடாது என்பதற்ாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5,713 கனஅடி தண்ணீர் சென்றது குறிப்பிடத்தக்கது.
கே.ஆர்.எஸ். அணையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 114 அடி தண்ணீர் இருந்தது. தற்போது அணையின் நீா்மட்டம் 102 அடியாக உள்ளது. இதனால், 15 நாட்களில் அணையின் நீர்மட்டம் 12 அடி குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையில் 25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) மட்டுமே தண்ணீர் உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டாலும், குடிநீர் தேவைக்காக கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாவிட்டால் டிசம்பர் மாதத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்று நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.