ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட மத வழிபாட்டு தலத்தை அகற்றக்கோரி நோட்டீசால் வன்முறை - கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு
|அரசு நிலத்தை ஆக்கிரமித்து மத வழிபாட்டு தலம் கட்டப்பட்டிருந்த நிலையில் அதை அகற்றக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் ஜுனாஹா மாவட்டத்தின் ஜூனாஹா நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு அருகே மற்றொரு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமும் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், கூடுதலாக கட்டப்பட்ட மதவழிபாட்டு தல கட்டிடம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, மதவழிபாட்டு தலம் சட்டப்பூர்வமாக கட்டப்பட்டதற்கான ஆவணங்களை 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் இல்லையேல் மத வழிபாட்டு தலம் அகற்றப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இதற்கான செலவை மதவழிபாட்டு தலத்தை நிர்வகிக்கும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது. இதற்கான நோட்டீஸ் அந்த வழிபாட்டு தலத்தில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி பிறப்பித்த நோட்டீசை கண்டித்து நேற்று இரவு இஸ்லாமிய மதத்தினர் தீடிரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு மத வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு வந்த 300க்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்த வன்முறையாளர்கள் போலீஸ் சோதனை சாவடி மீதும் தாக்குதல் நடத்தினர். போலீசார் மீதும் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் டிஎஸ்பி உள்பட 3 போலீசார் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.