பெங்களூருவில் சென்னை-மைசூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு
|பெங்களூருவில் வந்தே பாரத் ரெயில் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் 2 ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
பெங்களூரு,
சென்னை-மைசூரு இடையே பெங்களூரு வழியாக வந்தே பாரத் அதிவரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தென்இந்தியாவில் இயக்கப்படும் ஒரே வந்தே பாரத் ரெயிலாகும். வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
மேலும் குறைந்த நேரத்தில் சென்னை-மைசூரு இடையே இயங்கும் ஒரே ரெயில் இதுவாகும். இதனால் வந்தே பாரத் ரெயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் பயணிகளை ஏற்றி கொண்டு மைசூருவுக்கு புறப்பட்டது.
அந்த ரெயில் பெங்களூரு கே.ஆர்.புரம்-கண்டோன்மெண்ட் ரெயில் நிலையங்கள் இடையே சென்று கொண்டிருந்தபோது ரெயில் மீது மர்மநபர்கள் சிலர் கற்களை வீசினர். இதில் 2 ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் ரெயில் கண்ணாடியை பார்வையிட்டனர். இதையடுத்து ரெயில் மீது கல் வீசியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.