ராமநகர் அருகே வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு;
|ராமநகர் அருகே மைசூரு-சென்னை வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநகர்:
ராமநகர் அருகே மைசூரு-சென்னை வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தே பாரத் ரெயில்
கர்நாடக தலைநகர் பெங்களூரு, மைசூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் விதமாக கடந்த ஆண்டு தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மக்கள் மத்தியில் சொகுசு வசதிகள் கொண்ட அதிநவீன வந்தே பாரத் ரெயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பெங்களூரு, சென்னையில் உள்ள ஐ.டி. ஊழியர்களுக்கு இது ஒரு வரமாக அமைந்துள்ளது. ஆனால் வந்தே பாரத் ரெயில்களை குறி வைத்து பலமுறை கல்வீச்சு சம்பவங்கள் கடந்த நாட்களில் நடந்துள்ளது.
22 முறை கல்வீச்சு
சென்னை-மைசூரு வந்தே பாரத் ரெயிலில் இதுவரை 22 முறை கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இதனால் ரெயிலில் 27 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
இந்த நிலையில் சென்னை-மைசூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசப்பட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. நேற்று முன்தினம் வந்தே பாரத் ரெயில் ராமநகர் டவுன் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
ஜன்னல் கண்ணாடிகள்
அப்போது அந்த பகுதியில் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென கற்களை எடுத்து வீசினர். இதில் ரெயிலின் 4 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து ராமநகர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு நடத்தினர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெயில் மீது கல்வீசிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மைசூரு- சென்னை வந்தே பாரத் ரெயில் மீது தொடர்ந்து கல்வீசி தாக்கப்படுவதால் ரெயில்வே போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.