< Back
தேசிய செய்திகள்
2-வது நாளாக புதிய உச்சம் எட்டிய பங்கு வர்த்தகம்
தேசிய செய்திகள்

2-வது நாளாக புதிய உச்சம் எட்டிய பங்கு வர்த்தகம்

தினத்தந்தி
|
29 Nov 2022 11:41 AM IST

மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் 2-வது நாளாக இன்று புதிய உச்சம் எட்டியுள்ளன.



புதுடெல்லி,


இந்தியாவில் வார தொடக்க நாளான நேற்று காலை தொடங்கிய பங்கு வர்த்தகம், புதிய உச்சம் தொட்டு, 3 பருவங்களிலும் உச்சத்துடனேயே நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் புதிய உச்சம் எட்டியுள்ளன.

இதன்படி, மும்பை பங்கு சந்தைகள் 300 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தைகள் 100 புள்ளிகளும் உயர்ந்து காணப்பட்டன. இவற்றில் நிப்டி குறியீட்டில் இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் நெஸ்லே நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தன.

எனினும், பி.பி.சி.எல். மற்றும் மின்கட்டமைப்பு துறை சரிவை சந்தித்தன. உலோகம் மற்றும் மருந்து துறைகளும் உச்சம் தொட்டு உள்ளன. பொது துறை வங்கிகள் சற்று நெருக்கடியை சந்தித்தன.

இதேபோன்று அமெரிக்காவுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று 8 பைசாக்கள் உயர்ந்து ரூ.81.60 ஆக காணப்படுகிறது.

வெளிநாட்டு முதலீடுகளின் வரவுகள் மற்றும் உள்நாட்டு பங்கு வர்த்தகத்தில் சீரான நிலை ஆகியவை முதலீட்டாளர்களிடையே ஊக்க உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க கரன்சியின் சரிவு ஆனது, இந்தியாவுக்கு சாதக பலனை கொடுத்துள்ளன என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

ஆசிய பங்கு சந்தைகளில் வார தொடக்க நாளான நேற்று வர்த்தகம் குறைந்தே காணப்பட்டது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, அதன் தொடர்ச்சியாக அரசின் கொரோனா ஊரடங்கு அமல் மற்றும் அரசின் கொள்கைக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆகியவை எதிரொலியாக இந்த நிலை காணப்படுகிறது என கூறப்பட்டது. இதனால், பங்கு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.

சீன விவகாரம் தொடர்ச்சியாக, ஆசிய பங்கு சந்தை சரிவான நிலையை அடைந்தபோதும், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் நேற்று புதிய உச்சம் தொட்டன. இதன்படி, சென்செக்ஸ் குறியீடு 62,498 புள்ளிகளாகவும், நிப்டி குறியீடு 18,549.85 புள்ளிகளாகவும் இருந்தன.

எண்ணெய் மற்றும் எரிவாயு, தானியங்கி துறை இரண்டும் சென்செக்ஸ் மதிப்பில் 1% லாபத்துடன் காணப்பட்டன.

நிப்டி குறியீட்டில் 34 பங்குகள் முன்னேற்றம் அடைந்து லாப நோக்குடனும், 16 பங்குகள் சரிவடைந்தும் காணப்பட்டன. எஸ்.பி.ஐ. லைப், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பி.பி.சி.எல். ஆகியவை லாபத்துடன் இருந்தன.

தொடர்ந்து 2-வது நாளாக இந்திய பங்கு சந்தைகள் உயர்வை சந்தித்தும், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று உயர்ந்து காணப்படுவதும் முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்