< Back
தேசிய செய்திகள்
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பட்ஜெட் தாக்கல் - டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய செய்திகள்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பட்ஜெட் தாக்கல் - டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
1 Feb 2023 4:57 PM IST

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் டெல்லியை நடத்துவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ரூ.1.75 லட்சம் கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தியுள்ள போதிலும் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் டெல்லிக்கு ரூ.325 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் டெல்லியை நடத்துவதாக குற்றஞ்சாட்டிய அவர், பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு பட்ஜெட் தீர்வு அளிக்கவில்லை என்று கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்துக்கு நிவாரணம் இல்லை. மாறாக, இந்த பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும். வேலையில்லா திண்டாட்டத்தை அகற்ற உறுதியான திட்டம் எதுவும் இல்லை. கல்விக்கான பட்ஜெட் 2.64 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. சுகாதார பட்ஜெட்டை 2.2 சதவீதத்தில் இருந்து 1.98 சதவீதமாக குறைப்பது தீங்கு விளைவிக்கும்.

மத்திய அரசு டெல்லி மக்களிடம் மீண்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துள்ளது. டெல்லி மக்கள் கடந்த ஆண்டு ரூ.1.75 லட்சம் கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தியுள்ளனர். அதில் ரூ.325 கோடி மட்டுமே டெல்லியின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. இது டெல்லி மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்