சனாதன விவகாரம்: ஒரு சிறு அரசியல் தலைவரின் கருத்து 'இந்தியா' கூட்டணியின் கருத்து அல்ல - ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா
|எந்த மதத்தின் மீதும் இதுபோன்ற கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று ராகவ் சத்தா எம்.பி. தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர்.
மேலும் சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சனாதன விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நான் சனாதன தர்மத்தைச் சேர்ந்தவன். இது போன்ற பேச்சுகளை நான் கண்டிக்கிறேன். எந்த மதத்தின் மீதும் இதுபோன்ற கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும்.
சில கட்சிகளில் இருந்து சில தலைவர்கள் கூறும் கருத்து 'இந்தியா' கூட்டணியின் கருத்து என்று அர்த்தமில்லை. நாடு எதிர்நோக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பெரிய பிரச்னைகளை எழுப்புவதற்காக 'இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு சிறு தலைவர் கூறிய கருத்து, கூட்டணியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல."
இவ்வாறு ராகவ் சத்தா எம்.பி. தெரிவித்துள்ளார்.