குஜராத்தில் சவுராஷ்டிரா- தமிழ்சங்கமத்துக்கு ஏற்பாடு - பிரதமர் மோடி அறிவிப்பு
|காசி-தமிழ் சங்கமம் போல குஜராத்தில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக ‘மனதின்குரல்’ நிகழ்ச்சியில் பேசியபோது பிரதமர் மோடி அறிவித்தார்.
காசி-தமிழ் சங்கமம்
காசி-தமிழ்சங்கமம் என்ற பெயரில், வடக்கே உள்ள காசிக்கும், தெற்கே உள்ள தமிழ்நாட்டுக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை கண்டறிந்து, அவற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்க்கிற அற்புதமான நிகழ்ச்சியை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பரில் நடத்திக்காட்டியது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில்நுட்ப கழகமும் (ஐஐடி) சீரும், சிறப்புமாய் செய்திருந்தன.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 19-ந் தேதி காசியில் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சி டிசம்பர் 16-ந் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற்றது.
சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம்
இதேபோன்று குஜராத்தில் சவுராஷ்டிரா-தமிழ்சங்கமத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக அவர், மன்கிபாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் கலந்துரையாடியபோது கூறியதாவது:-
நமது நாட்டில் காலப்போக்கில் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு பாரம்பரியங்கள் உருவாகின்றன. இந்த பாரம்பரியங்கள், நமது கலாசாரத்தின் வலிமையை அதிகரிக்கின்றன. அத்துடன் தினமும் அதற்கு புதியதோர் உயிர்ச்சக்தியையும் அளிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பாக காசியில் அப்படி ஒரு பாரம்பரியம் தொடங்கியது. காசி-தமிழ் சங்கமத்தின் போது, காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று மற்றும் கலாசார உறவுகள் கொண்டாடப்பட்டன. ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற உணர்வு நமது நாட்டுக்கு பலத்தை அளிக்கிறது. நாம் ஒருவரையொருவர் தெரிந்து கொள்கிறபோதும், அறிந்து கொள்கிறபோதும், இந்த ஒற்றுமை உணர்வு வலுப்பெறுகிறது.
இந்த ஒற்றுமை உணர்வுடன் அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலும் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஏப்ரல் 17-ல் தொடக்கம்
இந்த சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, ஏப்ரல் 17-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதை 'மனதின்குரல்' நிகழ்ச்சி வாயிலாக கேட்கிறவர்கள் ஆச்சரியப்படுவார்கள். குஜராத்தில் இருக்கிற சவுராஷ்டிராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக சவுராஷ்டிராவைச் சேர்ந்த பலரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறினார்கள். இந்த மக்கள் இன்றும் சவுராஷ்டிரா தமிழர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். இன்றும் சவுராஷ்டிராவின் உணவுப்பழக்க வழக்கம், வாழ்க்கை முறை, சமூக சடங்குகளை அவர்களில் காண முடியும்.
மதுரை ஜெயச்சந்திரன் கடிதம்
இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் எனக்கு பாராட்டு கடிதங்கள் எழுதுகிறார்கள். மதுரையில் வசிக்கிற ஜெயச்சந்திரன், எனக்கு மிகவும் அழுத்தமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அவர், "ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, சவுராஷ்டிரா-தமிழ் உறவுகளைப்பற்றி முதல்முறையாக ஒருவர் சிந்தித்து, சவுராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறிய மக்களை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளார்" என எழுதி இருக்கிறார். ஜெயச்சந்திரனின் வார்த்தைகள், ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர சகோதரிகளின் வெளிப்பாடு ஆகும்.
இவ்வாறு பிரதமர் மோடி சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் பற்றி கூறினார்.