< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ புதிய சாதனை...!

தினத்தந்தி
|
7 Aug 2022 9:22 AM IST

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டா,

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது.

விண்வெளித் துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு, 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக, சிறிய ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

அந்த வகையில், 120 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, இரண்டு செயற்கைக்கோள்களுடன் காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

145 கிலோ எடைகொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோள் கடலோர நிலப் பயன்பாடு, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதற்காக 2 நவீனரக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு 8 கிலோ எடைகொண்ட ஆசாதிசாட் என்ற கல்விசார் செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 75 கிராமப்புறப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு இணைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இஓஎஸ், ஆசாதி சாட் செயற்கைக்கோள்களுடன், எஸ்.எஸ்.எல்.வி டி-1 ராக்கெட்டை செலுத்துவதற்கான ஏழு மணி நேர கவுண்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்தது.

சிறிய ரக ராக்கெட்டுகள் மூலம் செலவு குறைவதுடன், செயற்கைக்கோள் வடிவமைப்பாளர்களின் தேவையும் பூர்த்தியாவதாக இஸ்ரோ கருதுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 செயற்கைகோள்கள் இந்தியாவில் இருந்து ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்