மகனுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய பெண்.. கர்நாடகாவில் ருசிகர சம்பவம்
|எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கர்நாடகா முழுவதும் நேற்று தொடங்கியது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் மொழி பாடத் தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுவதும் 8.69 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இ்ந்த நிலையில் கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் தாயும், மகனும் ஒரே தேர்வு மையத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
யாதகிரி மாவட்டம் ஷாகாபுரா தாலுகாவில் சாகாரா கிராமத்தை சேர்ந்தவர் கங்கம்மா (வயது 32). இவருக்கு திருமணமாகி மல்லிகார்ஜுனா (15) என்ற மகன் உள்ளான். கங்கம்மா 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார். இதனால் அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வேண்டும் என்ற தீராத வேட்கையில் இருந்தார்.
இந்த நிலையில் அவரது மகன் மல்லிகார்ஜுனா நடப்பு கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்்து வந்தார். இதனால் மகன் உதவியுடன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்க கங்கம்மா முடிவு செய்து, அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தயாராகி வந்தார்.
நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கர்நாடகா முழுவதும் தொடங்கியது. தேர்வு எழுத கங்கம்மாவுக்கும், அவரது மகன் மல்லிகார்ஜுனாவுக்கும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் தாயும், மகனும் நேற்று தேர்வு எழுத ஒன்றாக வந்தனர். பின்னர் தனித்தனி வகுப்பறைகளில் அமர்ந்து கங்கம்மாவும், அவரது மகனும் தேர்வு எழுதினர். தாயும், மகனும் ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவது அப்பகுதி மாணவர்கள், மக்கள் மத்தியில் ருசிகர விவாதமாக மாறியுள்ளது.