< Back
தேசிய செய்திகள்
ஸ்ரீரங்கப்பட்டணா தசரா அக்டோபர் 16-ந் தேதி தொடக்கம்-மந்திரி செலுவராயசாமி அறிவிப்பு
தேசிய செய்திகள்

ஸ்ரீரங்கப்பட்டணா தசரா அக்டோபர் 16-ந் தேதி தொடக்கம்-மந்திரி செலுவராயசாமி அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Aug 2023 3:26 AM IST

ஸ்ரீரங்கப்பட்டணா தசரா வருகிற அக்டோபர் மாதம் 16-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று மந்திரி செலுவராயசாமி கூறினார்.

மண்டியா:-

ஸ்ரீரங்கப்பட்டணா தசரா

கர்நாடகத்தில் உள்ள மைசூரு மாவட்டத்தில் நடைபெறும் தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதுபோல் மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவிலும் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான ஸ்ரீரங்கப்பட்டணா தசராவை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் குமார், மாவட்ட பொறுப்பு மந்திரி செலுவராயசாமி மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மந்திரி செலுவராயசாமி பேசும்போது கூறியதாவது:-

புனரமைப்பு பணிகள்

இந்த ஆண்டுக்கான ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 16-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தசரா விழா வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும், பாரம்பரியத்துடனும், வழக்கமான கொண்டாட்டத்துடனும் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. பன்னிமண்டபம், ஜம்பு சவாரி ஊர்வலம் மற்றும் விழா மேடை அமைக்கப்படும் இடம் ஆகியவற்றை இப்போதே ஆய்வு செய்து அங்கு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தசரா விழா நடைபெறும் நாட்களில் மண்டியா நகர் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதுபோல் நகரில் பல்வேறு பகுதிகளில் தீப அலங்காரம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை தசரா விழாவை 3 நாட்களுக்கு பதிலாக 5 நாட்கள் கொண்டாடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

விவசாயிகள் தசரா

விவசாயிகள் தசரா, மகளிர் தசரா, இளைஞர் தசரா, குழந்தைகள் தசரா உள்பட பல்வேறு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரவிக்குமார், தர்ஷன் புட்டணய்யா, மரிதிப்பேகவுடா எம்.எல்.சி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்