< Back
தேசிய செய்திகள்
2 நாள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
தேசிய செய்திகள்

2 நாள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே

தினத்தந்தி
|
20 July 2023 8:32 PM GMT

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இந்தியா வந்தார். விமானம் மூலம் தலைநகர் டெல்லியில் அவரை வெளியுறவுத் துறை இணை மந்திரி முரளிதரன் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

தனது 2 நாள் பயணத்தின்போது ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கும் ரணில், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.

இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவு தொடங்கப்பட்டதன் 75-ம் ஆண்டு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இலங்கை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

உறவுகளை பலப்படுத்தும் பயணம்

ரணிலின் இந்த பயணம் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் முன்னேற்றும் மற்றும் பலப்படுத்தும் என இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அதே போல் ரணிலின் இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், "அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை எனும் இந்திய வெளியுறவுக் கொள்கையின்படி இலங்கை இந்தியாவுக்கு முக்கிய பங்குதாரர். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதை ஊக்குவிப்பதாகவும் இலங்கை அதிபரின் இந்த பயணம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்