< Back
தேசிய செய்திகள்
கர்நாடக முதல்-மந்திரி யார்? தனித்தனியாக ராகுல் காந்தியை சந்திக்கும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
தேசிய செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரி யார்? தனித்தனியாக ராகுல் காந்தியை சந்திக்கும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

தினத்தந்தி
|
17 May 2023 10:30 AM IST

கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கு இழுபறி நீடித்து வரும்நிலையில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் ராகுல்காந்தியை இன்று தனித்தனியாக சந்திக்கின்றனர்.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் யாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம், திணறி வருகிறது. இதையடுத்து இருவரையும் டெல்லிக்கு வரும்படி கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. அதன்படி சித்தராமையா நேற்று முன்தினமே டெல்லி சென்றுவிட்டார். அவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து, தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியே தீர வேண்டும் என்று கூறி கோரிக்கையை முன்வைத்தார். அங்கு தலைவர்கள் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர். டி.கே.சிவக்குமார் கடைசி நேரத்தில் டெல்லி பயணத்தை ரத்து செய்ததால், முதல்-மந்திரி யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து டெல்லியில் நேற்று 2-வது நாளாக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே கட்சி மேலிட அழைப்பின் பேரில் டி.கே.சிவக்குமார் நேற்று காலை 9.50 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் சில ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். டி.கே.சிவக்குமார் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரை நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டிற்கு மாலை 5.15 மணிக்கு சென்று சந்தித்தார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

அப்போது, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த தான் மேற்கொண்ட பணிகளை டி.கே. பட்டியலிட்டார். அதே நேரத்தில் கட்சியை பலப்படுத்த சித்தராமையா என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை அனுபவித்துள்ளார், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் 2 முறை இருந்துள்ளார் என்றும், அதனால் இந்த முறை தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்றும் பிடிவாதமாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா மீண்டும் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, டி.கே.சிவக்குமார் கூறிய அம்சங்களை அவரிடம் மல்லிகார்ஜுன கார்கே எடுத்து கூறியுள்ளார். அதற்கு சித்தராமையா, சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், தனது செல்வாக்கால் தான் தலித், முஸ்லிம், லிங்காயத் மற்றும் குருபா உள்ளிட்ட பின்தங்கிய சமூகங்களின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்ததாகவும், தேர்தல் அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற உள்ளதால் தனக்கு இந்த முறை முதல்-மந்திரி பதவி வழங்கியே தீர வேண்டும் என்றும் சித்தராமையா பிடிவாதமாக கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாக மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகிய இருவரையும் சந்திப்பதற்கு முன்னதாக மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இவ்வாறு கர்நாடக முதல்-மந்திரி தேர்வு விவகாரத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மாறி, மாறி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் இறுதி முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர். இதன் காரணமாக கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியை சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாக இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அநேகமாக இந்த விவகாரத்தில் இன்று (புதன்கிழமை) இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாளை (18-ந் தேதி) அல்லது 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்