< Back
தேசிய செய்திகள்
ஊதியமின்றி 80 விமானிகளை 3 மாத விடுப்பில் அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்- காரணம் என்ன?

Image Courtesy: PTI 

தேசிய செய்திகள்

ஊதியமின்றி 80 விமானிகளை 3 மாத விடுப்பில் அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்- காரணம் என்ன?

தினத்தந்தி
|
21 Sept 2022 7:04 PM IST

80 விமானிகளை ஊதியம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுப்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அனுப்பியுள்ளது.

குர்கான்,

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்று ஸ்பைஸ்ஜெட். இந்நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் விமான சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தற்காலிக நடவடிக்கையாக 80 விமானிகளை ஊதியம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுப்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அனுப்பியுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் விமானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன்படி போயிங் மற்றும் பம்பார்டியர் விமானங்களை இயக்கும் 80 விமானிகள் கட்டாய விடுப்பில் 3 மாதங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் " நிறுவனத்தின் செலவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் 80 விமானிகளுக்கு 3 மாதங்கள், ஊதியமில்லாமல் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோதிலும்கூட விமானநிறுவன ஊழியர் ஒருவரையும் பணிநீக்கம் செய்யக் கூடாது என்று கொள்கையோடு இருந்தோம். அதே கொள்கையோடுதான் நிர்வாக சீர்திருத்தங்களுக்காக நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த நடவடிக்கை தற்காலிகமானதுதான்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கை குறித்து விமானி ஒருவர் கூறுகையில் " ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதிச்சிக்கலில் இருப்பது தெரிந்ததுதான்.

ஆனால், திடீரென இந்த முடிவை நிறுவனம் எடுத்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகு நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்தும் நிச்சயமற்ற நிலை உள்ளது. விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்ட விமானிகளுக்கு மீண்டும் வேலைவழங்கப்படுமா என்பதும் உறுதியாக இல்லை" என்றார்.

மேலும் செய்திகள்