எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் சற்று அதிகரிப்பு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
|சரக்கு ரெயில்களின் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வகையான பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களின் சராசரி வேகம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
"2019-20-ம் ஆண்டில் சரக்கு ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 23.6 கிமீ ஆகும். இப்போது வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. பயணிகள் ரெயிலில், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 2019-20-ல் மணிக்கு 50.6 கி.மீ ஆக இருந்தது.
அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு 2023-24-ல் (நவம்பர் வரை) மணிக்கு 51.1 கிமீ வேகமாக உள்ளது. அதே போல் சாதாரண ரெயில்களும் 2019-20-ல் மணிக்கு 33.5 கிமீ வேகத்தில் இருந்து 2023-24-ல் 35.1 ஆக சிறிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன."
இவ்வாறு கூறினார்.