மாநில அளவிலான ஓணம் வார விழா நிறைவு: திருவனந்தபுரத்தில் கண்கவர் கலாச்சார ஊர்வலம்
|திருவனந்தபுரத்தில் கலாச்சார ஊர்வலத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் பிரசிதிப்பெற்ற ஓண விழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் அலங்கார ஊர்திகளுடன் கலாச்சார ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஊர்வலத்தை பார்த்து ரசித்தனர்.
கேரள சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் ஓணம் கலாச்சார வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் ஓண வார விழா கடந்த 6 - ந் தேதி தொடங்கியது. ஓணம் கலாச்சார வார விழாவை யொட்டி, திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 32 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஓண வார விழாவின் நிறைவாக நேற்று கண்கவர் அலங்கார கலாச்சார ஊர்வலம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரையிலான கலாச்சார ஊர்வலத்தை முதல் மந்திரி பினராயி விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து செல்ல, மோகினியாட்ட பெண்கள் அணிவகுப்பை அலங்ரித்தனர். கேரள பாரம்பரிய உடையணிந்த 100 ஆண்கள் முத்துக்குடை ஏந்தி முன் சென்றனர். தொடர்ந்து, வேலகளி, கதகளி, ஆலவட்டம், தெய்யம், படயணி, புலிக்களி, நீலக்காவடி உட்பட 77 வகை கலை குழுவினரின் கலாச்சார அணிவகுப்பு இடம்பெற்றது.
அதே போல், தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத் உட்பட 10 மாநில கலாச்சார குழுவினர் தங்களது பாரம்பரிய கலையினை வெளிப்படுத்திய படி அணிவகுத்து சென்றனர். அவர்களை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்தது. 76 ஊர்திகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டன.
திருவனந்தபுரம் பாளையம் பல்கலைக்கழக கல்லூரி அருகே அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு பந்தலில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அவரது மனைவி கமலா விஜயன், மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தாருடன் இருந்து கண்டு களித்தனர். ஊர்வலத்தையொட்டி, கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரை சாலையின் இருபறமும் பொதுமக்கள் கூடி நின்று ஊர்வலத்தை கண்டு மகிழ்ந்தனர்.
கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரை சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் அணிவகுப்பை பார்வையிட்டனர் ஊர்வலத்தை காணவரும் பார்வையாளர்களின் வசதிக்காக அவர்கள் வரும் வாகனங்களை பார்க் செய்ய, தைக்காடு போலீஸ் மைதானம் உட்பட 12 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
அதே போல் கிழக்கு கோட்டையில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு செல்ல கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. 1000 போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு கனக குன்னு நிசாகந்தி அரங்கில் நடைபெற்ற நிறைவு விழா கலைநிகழ்ச்சிகளை சுற்றுலா துறை மந்திரி முகம்மது ரியாஸ் தொடங்கிவைத்தார். தொடந்து சிறந்த அலங்கார ஊர்திகளுக்கு மந்திரி பரிசுகளை வழங்கினார்.