< Back
தேசிய செய்திகள்
விஷு பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தேசிய செய்திகள்

விஷு பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
16 April 2023 5:34 AM IST

விஷு பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயம் வழங்கப்பட்டது.

விஷு பண்டிகை

கேரளாவில் விஷு பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அறுவடை விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி வீடுகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து குடும்பம் குடும்பமாக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விஷூ கனி கண்டு வழிபாடு செய்தனர்.

வீடுகளில் கிருஷ்ணனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, கண்ணாடி முன் காய்கறி, பழங்கள், கனிக்கொன்றை பூக்களை வைத்து விஷு கனி காணும் நிகழ்ச்சியை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். வீடுகளில் உள்ள முதியவர்கள், புத்தம் புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை கை நீட்டமாக வழங்கினார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவில்

விஷு பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை கனி காணும் நிகழ்ச்சியை காண பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சாமியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்கினார்கள்.

சபரிமலையில் நடிகர் யோகிபாபு நேற்று சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்