< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயில்; மந்திரி சசிகலா ஜோலே பேட்டி
தேசிய செய்திகள்

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயில்; மந்திரி சசிகலா ஜோலே பேட்டி

தினத்தந்தி
|
12 July 2022 2:01 AM IST

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்காக கர்நாடக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மந்திரி ஆய்வு

பெங்களூரு பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்திற்கு மந்திரி சசிகலா ஜோலே சென்றார். பின்னர் பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு செல்லும் பாரத் கவுரவ் சிறப்பு ரெயிலின் பெட்டிகளை ஆய்வு செய்தார். அப்போது அவருடன், ரெயில்வே கமர்சியல் மேலாளர் அனுப் தயானந்த் சாது, என்ஜினீயர் ரோகினியும் இருந்தனர். பின்னர் ரெயில்வே அதிகாரிகளுடன், மந்திரி சசிகலா ஜோலே ஆலோசனையும் நடத்தினார்.

பின்னர் மந்திரி சசிகலா ஜோலே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வாரணாசிக்கு சிறப்பு ரெயில்

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே துறையுடன் கர்நாடக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. வாரணாசிக்கு சிறப்பு ரெயில் இயக்கும் திட்டத்திற்காக அரசு ரூ.15 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. காசிக்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு இந்த ரெயில் பயன் உள்ளதாக இருக்கும். ஏற்கனவே காசி யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் உதவி தொகை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி உள்ளது.

அதன்படி, வாரத்தின் 7 நாட்களும் இந்த சிறப்பு ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரெயில்வே துறையுடன் கா்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ரெயில்வே துறைக்கு முதற்கட்டமாக ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கு வங்கி உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த சிறப்பு ரெயில் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டதாக ஆகிவிடும்.

ரூ.8,533 கட்டணம்

பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் மூலமாக புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் காசி, வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்திக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. மொத்தம் இந்த ரெயிலில் 14 பெட்டிகள் இருக்கும். அதில், ஒரு பெட்டி முழுவதுமாக யாத்திரை செல்லும் பக்தர்கள் பஜனை பிற நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒதுக்கப்படும். ரெயில் பெட்டிகளில் கர்நாடகத்தில் உள்ள கோவில்களின் புகைப்படங்கள் இடம் பெறும்.

ஒருவர் பயணம் செய்ய ரூ.8,533 டிக்கெட் கட்டணம் பெறப்படும். ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். 7 நாட்களுக்குள் பக்தர்கள் சென்று திரும்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்